‘ஸ்பிளென்டர்’ பைக் ஓட்டிகளே உஷார்; நாகை திருடன் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடுபோகும் சம்பவங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இதுதொடர்பாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வரவே விசாரணையில் இறங்கினர்.


பைக் திருடர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சூழலில் வழக்கம்போல் சித்தர்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இளைஞர் ஒருவர் வந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரிக்கையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.


இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை காட்டுமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர் பெருந்தோட்டத்தை சேர்ந்த சுந்தர் என்று தெரியவந்தது.

அதேசமயம் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் மயிலாடுதுறை, பெரம்பூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் கண்டறியப்பட்டது. இதுவரை 12 இருசக்கர வாகனங்களை திருடி சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.


குறிப்பாக ஸ்பிளென்டர் பைக்குகளை குறிவைத்து திருடியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு கள்ளச்சாவி மூலம் ஸ்பிளென்டர் பைக்குகளை எளிதில் திருடிவிடலாம். இதனை விற்றால் நல்ல விலைக்கு போகும் என்று கூறியுள்ளார்.

இதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே ஸ்பிளென்டர் பைக்குகள் வைத்திருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதையும் இதன்மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.


இந்நிலையில் சித்தர்காடு காவிரி ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாததால் திருடிய பைக்குகளை பதுக்கி வைத்து வந்ததாக கூறப்படுகிறது.